SaraThas Blog

தலை குனிந்து என்னை பார் ,தலை நிமிர வைக்கிறேன் - புத்தகம்

ஒரு காதல் கதை - காதல் 3

  கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்க , அனைவரும் பள்ளி செல்ல ஆரம்பித்தனர். அவர்கள் பள்ளி செல்வதை ஆர்வத்துடனும் ஏக்கத்துடனும் பார்த்துகொண்டுஇருந்தாள் மரகதம்.
பாட்டி அழைப்பதை கண்டு , ஒரு பெருமூச்சுடன் தனது தலையில் இருந்த சுள்ளிகளை கொண்டு போய் வீட்டில் சேர்த்தாள்.

"என்னடா ராசாத்தி .. முகம் எல்லா வாடிக்கிடக்கு " என்றார் பாட்டி.
"ஒண்ணுமில்லை கிழவி .. வெயில்ல வந்தேன்ல அதான் " என்று மரகதம் தன் மனஆசையை மறைத்தபடி கூறினாள்.

பாட்டிக்கு அவளது மனம் அறிந்தாலும் , இந்த வயதிலேயே அதைமறைத்து பக்குவமாய் நடக்கும் தனது பேத்தியை வாஞ்சையுடன் தழுவிக்கொண்டார். அவரின் உலகமே அவளது பேத்திதான். அவளது ஆசையை அவர் நிராகரிப்பாரா ?.. தான் வேலைசெய்யும் பெரிய வீட்டிற்கு சென்றார்.
"ஐயா ,.. ஐயா "

"சொல்லு ராக்கம்மா ..என்ன விஷயம் "
"ஐயா என்னோட பேத்தி பள்ளிக்கூடத்துக்கு போகனுன்னு ஆசைப்படுறாள்.. அதுக்கு என்ன பன்னுறதுனு எனக்கு தெரியல. ஐயா ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா , நான் போய் அவளை சேர்த்திவிட்டுடுவேன்."

"ராக்கம்மா .. நீயே உன்னோட பேத்தியை வச்சுக்கிட்டு இந்த வயசிலேயும் வேலைபார்த்து காஞ்சி ஊத்துற.. உன்னோட பையன் எல்லா சொத்தையும் அழிச்சுட்டான். இப்போ உனக்கு உதவியா கூட இருக்கறவளை படிக்கச் வச்ச , நீயே ஒத்தையால்ல கஷ்டப்படணும்...இதெல்ல உனக்கு தேவையா.. இன்னும் கொஞ்ச வருஷத்துல புள்ள ஆளானதும் கட்டிக்குடுத்து கடமையை நிறைவேற்று .." என்று வாழ்க்கையின் நிதர்ச்சனத்தை கூற, பாட்டிக்கோ தனது செல்ல பேத்தியின் அருமை முகம் மனசில் வர
"இல்லைங்கய்யா . அவ ஆசைப்படுறா.. இப்போ கொஞ்ச நாள் போகட்டும் .. ஆளானதும் அப்பறம் நல்லவனா பாத்து கட்டிக்குடுத்துட்றேன்.."

"நான் சொல்றத சொல்லிட்டேன் ராக்கம்மா , நான் வாத்தியார்கிட்ட , சொல்லுறேன் .. உன்னோட பேத்தியை புதன்கிழமையில் இருந்து போகச்சொல்லு. அங்கேயே பள்ளிக்கூடத்து துணி தருவாங்க.. அதை வாங்கி போட்டுக்க சொல்லு. சாயங்காலம் வந்து இங்க கொஞ்சம் வேலைபார்க்க சொல்லு , அவ படிப்புக்கு தேவையான பணம் எல்லாம் நான் பாத்துக்கறேன்.." என்று எழுந்து உள்ளே சென்றார்.
"ரொம்ப நன்றி ஐயா " என்று சந்தோசத்துடன் வீடு நோக்கி சென்றார் பாட்டி.

சந்தோசத்துடன் பாட்டி வீட்டிற்கு வர, அவளது பேத்தி , வீட்டை சுத்தப்படுத்தி பழைய சாதத்துடன் மிளகு வத்தலை எடுத்து வைத்துவிட்டு , தனக்கு செய்த கேப்பை களியை நேற்று வைத்த குழம்புடன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.

பாட்டி , கை கால் அலம்பிவிட்டு அமர , மரகதம் பழையசோத்தை கரைத்து , சிறிது தயிர் ஊத்தி, நன்றாக கரைத்து அவருக்கு குடுத்தார். வெயிலில் வந்ததற்கும் பசிக்கும் அவள் அளித்த பழையசோறும் தேவார்மிதமாய் இருந்தது.
அவளுக்கு சந்தோசமாக இருக்கவேண்டும் என்று அவளது பள்ளிக்கூட விவரத்தை அவளிடம் சொல்லாமல் வைத்துஇருந்தார். மறுநாள் அவளை பெரிய வீட்டிற்கு அழைத்து சென்று , ஐயாவிடம் சொல்லிவிட்டு அவளை அங்கே வேலைக்கு சேர்த்தார்.
அவளுக்கும் வீட்டில் பொழுதுபோகாமல் இருப்பதற்கு இங்கே வந்து வேலைசெய்வதும் பிடித்துஇருந்தது. அவளும் அமைதியாக வேலைசெய்து கொண்டு இருந்தாள். அங்கேயே அவளுக்கு சாயங்காலம் காபி தர குடித்துவிட்டு ஆறுமணிவரை வேலை பார்த்தாள்.

புதன்கிழமை விடியல் அவளுக்கு மிக அழகாக விடிந்தது போல.. காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு , வாசல் தெளித்து கோலம்போட்டுவிட்டு , சாமிபடத்தின் முன் விளக்கேற்றி சாமிகும்பிட்டாள். அதற்குள் பாட்டி எழுந்து அவளுக்கு தலைவாரி , பூ வைத்து , அவளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றார்.
அவளுக்கு பேச்சே வரவில்லை , தானும் பள்ளிக்கு செல்லப்போகிறோம் என்ற உணர்வு பதியவே அவளுக்கு தாமதமாகியது. அவளை அங்கே விட்டுட்டு பாட்டி செல்ல, முதல் நாள் பள்ளி செல்லும் குழந்தைபோல அவரை விடாமல் பிடித்துக்கொண்டு அவளது கணத்தில் முத்தமிட்டு , சிறிது வழிஅனுப்பினாள். 

  அவளை முதல் வகுப்பில் சேர , அங்கு இருந்த குழந்தைகளுடன் அவளும் ஐக்கியமாகிப்போனாள்.
அவள் வருவதை பார்த்த முத்து , பக்கத்து வகுப்பில் இருந்து வந்து அவளை பார்த்துவிட்டு ,

"சொன்ன மாறியே வந்துட்டியே..நல்ல படி .."
"ஆமா , பாட்டி என்கிட்ட கூட சொல்லுல .. நேர வந்து சேத்திவிடுச்சு .." என்று கண்களை சுழற்றி , மகிழ்ச்சியுடன் கூறிக்கொண்டு இருந்தாள்.

மதிய இடைவேளையில் , பாட்டி அவளை பார்த்துவிட்டு , அவள் விளையாடும் அழகை கண்டு விட்டு அவளுக்கு உணவு ஊட்டிவிட்டு சென்றார்.
அவள் ஆசையுடன் , பாட்டியிடம் சாப்பாடு வாய் திறந்து வாங்குவதை பார்த்த , முத்துவிற்கும் தனது அம்மாவின் நினைவில் அழுகை வந்தது.

அவன் சோகமாக இருப்பதை பார்த்த மரகதம் , அவனிடம் சென்று ," எதுக்கு இப்படி உட்காந்து இருக்கா ?"
"அம்மா ஞாபகம் வந்துடுச்சு.. அம்மாவும் எனக்கு இதேமாறித்தான் சாப்பாடு ஊட்டிவிடுவாங்க "

"உனக்கு தான் அம்மா வீட்டுல இருக்காங்களே. ஹ்ய சின்ன புள்ளை கணக்கா இப்படி அழுகிற"
"நான் ஒன்னும் சின்ன புள்ளை இல்லை , நான் பெரிய பையனாக்கும்" என்று நிமிர்ந்து அவளை பார்த்தான்.

"ஆமாமா.. ரொம்ப பெரிய பையன்.. சரி வா விளையாடலாம்.." என்று கூறிவிட்டு திரும்பி அவனை பார்த்து சாப்டியா என்று கேட்டாள்.
"இல்லை .. " என்று அவன் கூற , " உனக்கு அம்மா ஊட்டிவிடத்துனால சாப்பிடலையா?"

அவனோ ஆமா என்க, சாப்பாட்டை எடுத்து அவனுக்கு அவளே ஊட்டிவிட்டாள்.
அவனும் சந்தோசமாக அதை வாங்கி சாப்பிட்டான்.
இருவரது மனதிலும் இருந்த குழந்தைத்தனம் மிகுந்த அன்பு அவர்களிடம் மிகுதியாய் இருந்தது.

நண்பன் என்று கூறவில்லை .. கைகுலுக்கவும் இல்லை .. ஆனால் இருவரிடமும் இருந்த அன்பு அவர்களது நட்பிற்கு வழிவகுத்தது.
நட்பு என்னும் சொல்லே அழகானது . அதிலும் குழந்தை பருவத்தில் மனதில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் , பள்ளியில் முதல் நாள் நமது அருகில் இருக்கும் தோழன்/தோழிகளே நமது முதல் நண்பர்கள் ஆவார்கள். எத்தனை காலம் ஆனாலும் முதல் காதலை போல , முதல் நட்பை நம்மால் மறக்க இயலாது.

அதேபோல் அவர்களின் அந்த அழகிய நட்பு , அவர்களின் வாழ்வை சீரமைக்குமா ? சீர்குலைக்குமா?......

ஒரு காதல் கதை - காதல் 3 ஒரு காதல் கதை - காதல் 3 Reviewed by SaraThas on December 09, 2018 Rating: 5

Post Comments

No comments:

Powered by Blogger.